1431 ஆண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்பதை வரலாறு நெடுக காண முடிகிறது. இது இன்று வரை தொடர்கதையாகவே இருக்கிறது.
மார்க்கத்தை விளங்காத மக்கள் செய்த துரோகத்தைக் காட்டிலும் விளங்கி புரிந்து கொண்ட ஆட்சியாளர்களும் அறிஞர்களும் தான் அதிகளவில் துரோகம் இழைத்துள்ளனர். இது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் துனீஸியாவில் நடந்துள்ள சம்பவங்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் பாரம்பர்யத்திற்கு சொந்தமான நாடுதான் துனீஸியா. வடஆப்ரிக்காவில் மத்தியத் தரைக்கடலின் கரையோர இஸ்லாமிய நாடுகளில் ஒன்று. அரபியில் “மகரிப்” என சூரியன் மறையும் இடம் என்றழைக்கப்படும் நாடுகளான லிபியா, துனீஸியா, அல்ஜீரியா, மொரோக்கோ ஆகிய நாடுகளில் துனீஸியாவும் ஒன்று. கடந்த இரண்டு மாத காலமாக துனீஸியா மக்கள் அங்கு நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். என்ன நடந்தது?
1987 ஆம் ஆண்டு முதல் ஜைய்னுல் ஆபீதின் பின் அலி என்பவர் துனீஸியாவின் அதிபராக இருந்தார். இஸ்லாமிய நாடுகளில் யார் ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலும் அவர் தங்களுக்கு அடிமைப்பட்டவராக இருந்தால் மட்டும் தான் அவரை ஆட்சியில் நீடிக்க விடுவோம் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் வல்லு£றுகளான அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் துனீஸிய அதிபர் பின்அலி தங்களுக்கு அடிமை போல செயல்படுவதைக் கண்டு பூரித்துப் போய் அதிபர் பின்அலியின் அடாவடித்தனம் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்தனர். 27 ஆண்டு கால பின் அலியின் ஆட்சியில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான மேற்கத்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டினையும் வலிந்து மக்களிடம் திணிக்கும் சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார்.
முதலில் பின்அலி அடிப்படையில் தான் ஒரு முஸ்லிம் என்பதையும் இஸ்லாமிய பாரம்பர்யமிக்க நாட்டின் ஆட்சியாளன் என்பதையும் மறந்து இஸ்லாத்தை துனீஸியாவிலிருந்து அகற்றிட தேவையான அனைத்து நடவடிக்கையும் சட்டப்பூர்வமாக்கினார்.
ஒன்றரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட துனீஸியாவில் 99 விழுக்காடு சன்னி முஸ்லிம்கள். மாலிகி மத்ஹபைப் பின்பற்றுகின்றனர். சிறிய அளவில் காரிஜியாக்கள் எனும் எதிர் புரட்சியாளர்களும் உள்ளனர். இப்படி முஸ்லிம்கள் நிறைந்த நாட்டில் பொதுச் சட்டத்தில் ஃபிரென்ஞ்சிவில் சட்டத்தைப் புகுத்தி பெருவாரியான முஸ்லிம்களை குடும்ப இயலில் ஷரிஅத்திலிருந்து விலகிட வைத்தார். இன்றும் துனிஸியாவில் பாகப்பிரிவினை இஸ்லாமிய அடிப்படையில் நடைபெறுவது கிடையாது. அதேபோல பலதார மணத்திற்கு தடைச்சட்டம் இயற்றிய ஒரே முஸ்லிம் நாடு துனீஸியா தான். விவாகரத்திற்கு கடுமையான தடைகள். பெண்கள் ஹிஜாப் அணிய சட்டரீதியான தடை. தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலை பூட்ட வேண்டும். பொது இடங்களில் தொழுகை நடத்த தடை. இஸ்லாமிய கலாச்சாரத்தோடு வாழும் ஆண்கள் காவல்துறையால் துன்புறுத்தப்பட்டனர். வலுக்கட்டாயமாக தாடியை மழிக்க வைக்கப்பட்டனர். இஸ்லாமிய அடிப்படையில் இயக்கங்கள் நடத்த தடை என்று 27 ஆண்டுகளாக துனீஸிய மக்களை அடக்கி வைத்துக் கொண்டிருந்தார் அதிபர் பின் அலி.
ஒரு முஸ்லிம் ஆட்சியாளராலேயே முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு விலக நேரந்தது.
மேலும் இவரது கண்மூடித்தனமாக மேற்கத்திய அடிமைத்தனமும் பொருளாதார கொள்கையில் இவர் பின்பற்றிய மேற்கத்திய வழிமுறையும் பின் அலியின் மனைவி முதல் ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து அடித்த கொள்ளையின் காரணமாகவும் துனீஸியாவின் பொருளாதாரம் நசிந்தது. வேலை இல்லாத் திண்டாட்டம் எல்லை மீறிச் சென்றது. உணவுப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலையேற்றம், லஞ்சம், ஊழல், மனித உரிமை மீறல்கள், நசிந்துபோன வாழ்க்கை தரம் என்று மக்கள் விழி பிதுங்கி நின்றனர்.
இந்த நேரத்தில் தான் துனீஸியாவின் ‘சித்திபஅசித்’ என்ற நகரில் காய்கறி கடைவைத்திருந்த பட்டதாரி முகம்மது பவுசி என்ற 24 வயது இளைஞன் காவல்துறையின் அட்டூழியம் தாங்காமல் தற்கொலை. செய்து கொண்டான். செய்தி துனீஸியா முழுவதும் பரவியது. காத்துக் கொண்டிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பி தெருக்களில் அரசிற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர். மேலும் தற்கொலைகள் நடந்தன. காவல்துறை மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். புரட்சி மேலும் தீவிரமாகியது. துனீஸியாவில் உள்ள 90 விழுக்காடு வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டவுடன் அவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
உலகம் முழுவதிலுமிருந்த மனித உரிமை அமைப்புகள் பின் அலியை கடுமையாக விமர்சித்தன. கருத்துச் சொல்லும் எல்லோரையும் ஒடுக்க நினைத்தார். அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தடை, இணைய தளத்திற்கு தடை என்று எல்லாம் செய்து பார்த்தார். மக்கள் புரட்சி மேலும் தீவிரமாகியது. இறுதியாக தங்கள் எஜமானர்களான அமெரிக்கா மற்றும் ஃபிரான்ஸிடம் கெஞ்சிப் பார்த்தார். அவர்கள் எப்போதும் “நன்றி” உள்ளவர்கள் அல்லவா! அவர்களும் சரியான சமயத்தில் பின்அலியை கழற்றிவிட்டனர். கையில் கிடைத்த தங்க கட்டிகளுடன் புகழிடம் தேடி புறப்பட்ட பின் அலியின் விமானத்தை தரையிறங்கிட ஃபிரான்ஸ் அரசு அனுமதி தரவில்லை. வேறு வழியில்லாமல் சவூதி அரேபியாவில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளார். பின்அலி புறப்படும் முன் அவரது ஆதரவாளர்களை வைத்து அமைத்த தற்காலிக அரசையும் எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.
துனீஸியாவில் ஏற்பட்டுள்ள இந்த மக்கள் புரட்சி அருகில் உள்ள நாடுகளுக்கும் பரவி வருகிறது. அல்ஜீரியா, ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, உணவுப் பொருள் தட்டுப்பாட்டின் காரணமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உலகில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தின் மேம்பாட்டிற்காக இறைவன் இஸ்லாமிய நாடுகளில் வழங்கிய வளங்களை ஒருசிலர் மட்டும் கொள்ளையடித்து வருகின்றனர். இந்த கொள்ளையர்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள். இதன் காரணமாக 57 இஸ்லாமிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.
இஸ்லாத்திற்கு துரோகம் செய்யும் முஸ்லிம் ஆட்சியாளர்களின் நடவடிக்கை தொடர்கிறது. தீர்வு எப்போது?
Posted by
Unknown
Labels:
புரட்சி
0 comments:
Post a Comment