ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சிலர் சிலரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவித்து வருகின்றனர்.

April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது

முஸ்லிம்களில் சிலரும் இதை செய்து வருகின்றனர்.

எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

ஹோலி கலாச்சாரம்

பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலி பண்டிகையின் போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)

பொய்க் கலாச்சாரம்

இதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின் அருளும் அன்பும் இழந்து அவனது கோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 6094

ஆக இந்தப் பொய்யர்கள் அதிகமான தீமைகளைச் செய்து நரகத்தை அடைகின்றனர். எனவே நாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பொய்ச் சத்தியம் செய்தல்

இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப வைக்கின்றனர்.

இவர்களைப் பற்றி வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! (அல்குர்ஆன் 68:10)
மேலும் இப்படிப் பொய்ச் சத்தியம் செய்வது யாருடைய குணம் என்றால் அல்லாஹ்விற்குப் பிடிக்காத நயவஞ்சகர்களின் குணமாகும்.
இவர்களுடைய இந்தச் சுபாவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக் குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)

எனவே நாம் ஒரு போதும் பொய்ச் சத்தியம் செய்யக் கூடாது.

பொய் சாட்சி கூறல்

ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.
அபூபக்ரா (ரலி) கூறியதாவது: “பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். “ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்” என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்” என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, “அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)” என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)

ஏமாற்றுதல்

இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள். இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும். உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல. (நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)

“மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி’ என்று கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6178)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும். (நூல்: முஸ்லிம் 3271)

முஸ்லிமின் அடுத்த அறிவிப்பில் அவனுடைய மோசடிகளுக்குத் தக்கவாறு அது உயர்த்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

எனவே வல்ல அல்லாஹ்வுக்குப் பயந்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி உண்மையாளராக நாம் திகழ வேண்டும்.

கேலி செய்தல்

மக்களில் சிலர் சிலரை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய பிறகு ஏளனமாகச் சிரிப்பது, கிண்டல் செய்வது, ஆர்ப்பரிப்பது என்று எப்படியெல்லாம் அவமரியாதை செய்ய முடியுமோ அனைத்தையும் கையாளுகின்றனர். இந்தக் கெட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் என்றால் இறை நிராகரிப்பாளர்கள் தாம். (ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப் பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (அல்குர்ஆன் 2:212)

தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண் டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 9:79)

இந்த வசனங்களில் அல்லாஹ், நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்குரிய தண்டனையைப் பற்றியும் கூறுகின்றான். எனவே நாம் இந்தத் தீய பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

இழிவாகக் கருதுவது

இறுதியாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறரை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கை கொட்டி ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள்? என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும்.
அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும், உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களை, தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால் தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அனாவசியமாகக் கருதி, கேவலமாக நடத்தி இழிவு படுத்துகின்றனர்.

இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர் தான். (நூல்: புகாரி 10, 6484)

இதல்லாம் ஜாலிக்காக செய்திகன்றோம் இதில் என்ன தவறு என்று சிலர் போலி வியாக்கியானம் கொடுப்பார்கள். உண்மையில் அவர்கள் தான் தன்னை யாரும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள்.

தன்னை யாரேனும் ஏப்ரல் ஃபுல் ஆக்கி விட்டால்அது நமக்கு அசிங்கம் இழிவு என்று நினைக்கும் இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபுல் ஆக்கும் போது அதை மறந்து விடுவது ஏன்?

ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!
நன்றி: தவ்ஹீத் ஜமாஅத்
Posted by Unknown

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.