அதிமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, புதிய தமிழகம், நாடாளும் மக்கள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, குடியரசு கட்சி, பார்வார்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகள் உள்ளன.
இந்த கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது.
டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம், செ.கு. தமிழரசன் தலைமையில் உள்ள இந்திய குடியரசு கட்சி, பி.வி.கதிரவன் பொதுச் செயலாளராக உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒரு சீட் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுபற்றிய அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க. மேலிடத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது.
அ.தி. மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பெரும்பாலும் முடிவடைந்து விட்டதாகவும் வரும் 18ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 1 தொகுதி ஒதுக்கியதால் மட்டும் அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறிய மனிதநேய மக்கள் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளுடன் திருப்தி அடையுமா என்பது போகப்போகத் தெரியும்.
Posted by
Unknown
Labels:
TMMK
0 comments:
Post a Comment