சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு 80 இடங்கள் தர வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் நேற்று முதல் முறையாக சந்தி்த்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
திமுக குழுவில் துணை முதலமைச்சரும், பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் உயர்நிலை செயல் திட்ட குழு உறுபபினர் அமைச்சர் பொன்முடி ஆகியோரும் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், நாமக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
லண்டனில் சுற்றுப் பயணத்தில் இருந்த ஸ்டாலின் சென்னை திரும்பியதையடுத்து நேற்று இந்தக் குழுவினர் சந்தித்தனர்.
அண்ணா அறிவாலயத்தில் மாலையில் நடந்த பேச்சுவார்த்தையில் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் காந்தி 30+30+30 என்ற பார்முலாப்படி 90 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மாநில அரசியல் நிலைமை, பிற கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய இடங்களை மனதில் கொண்டு 80 இடங்களை காங்கிரஸ் நிச்சயம் எதிர்பார்ப்பதாகவும் திமுகவிடம் காங்கிரஸ் ஐவர் குழு கோரியது.
மேலும் ஆட்சியில் பங்குபெறவும் காங்கிரஸ் விரும்புவதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.
ஆனால், காங்கிரசுக்கு 60 இடங்கள் வரை தர தயாராக இருப்பதாக திமுக குழுவினர் தெரிவித்ததாகத் தெரிகிறது. ஆட்சியில் பங்கு குறித்து தேர்தலுக்குப் பின் பேசலாம் என்றும் அவர்களிடம் திமுக கூறியதாகத் தெரிகிறது.
ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி வேண்டாம் என்ற நிலையில் உள்ள வாசன் தரப்பு, ஆட்சியில் பங்கு கோர வேண்டும், அதிக இடங்கள் பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் கட்சித் தரப்பில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற விருப்பதைத் தெரிவித்துள்ளோம். பேச்சு விவரங்களை இரு கட்சிகளின் மேலிடங்களுக்கும் தெரிவிப்போம். அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, ஓரிரு நாள்களில் இரண்டாம் கட்டப் பேச்சு நடக்கும் என்றார்.
மு.க.ஸ்டாலின் கூறுகையில், பேச்சுவார்த்தை சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஓரிரு நாளில் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு எட்டப்படும் என்றார்.
அடுத்த சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழகம் வந்து முதல்வருடன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 48 இடங்களில் போட்டியிட்டு 34 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியில் பங்கு-சோனியா முடிவு செய்வார்-வாசன்:
இந் நிலையில் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் பேசிய வாசன், கடந்த 2004ம் ஆண்டில் தொடங்கி, மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்கள் எனப் பல தேர்தல்களை வெற்றிகரமாகச் சந்தித்து வரும் கூட்டணி திமுக-காங்கிரஸ் கூட்டணி.
கட்சியின் அகில இந்தியத் தலைமை மற்றும் மாநிலத் தலைமை எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் யூகங்களுக்கே இடமில்லை.
தமிழகத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்பதா, இல்லையா என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்திதான் முடிவு செய்வார். தமிழகத்தைக் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பல்வேறு வகையான நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. இதைத்தான் எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய பலமாக கருதுகிறோம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தைப் பொருத்தவரை அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆகையால், அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை என்றார்.
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.