அதிமுக கூட்டணியில் நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி உடன்பாட்டை ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் இருவரும் இணைந்து வெளியிட்டனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத கால இடைவெளி மட்டுமே இருக்கும் நிலையில், கட்சிகளிடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாகவே இருந்து வருகிறது.
காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகியவை எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், இன்று தென் மாவட்ட திமுக செயலாளர் அழகிரி, "விஜயகாந்த் என் நண்பர்; அவர் ரோசக்காரர். அதிமுகவில் அவர் இணைய மாட்டார்" என்று அதிரடி பேட்டி வழங்கியிருந்தார்.
இந்நிலையில், இன்று இரவு போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை நடிகர் விஜயகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். இருவருக்குமிடையிலான பேச்சு வார்த்தையின் முடிவில்,அதிமுக தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஜெயலலிதா மற்று விஜயகாந்த் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இதன்மூலம் விஜயகாந்தின் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மூன்றாம் அணி அமைவது சாத்தியமில்லை என்று தெரிகிறது. விரைவிலேயே காங்கிரஸ் மற்றும் திமுகவிடையே கூட்டணி பேச்சு வார்த்தை ஒருமுடிவுக்கு எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Posted by
Unknown
Labels:
தேர்தல்
0 comments:
Post a Comment