இந்தியாவில், வங்கிக் கணக்கைத் துவக்குவதிலும், வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதிலும் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக, தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2007-2008 ஆம் ஆண்டில், இது தொடர்பான புகார்களின் எண்ணிக்கை சுமார் 1500 ஆக இருந்தது. ஆனால், 2009-2010 ஆம் ஆண்டில், ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த எண்ணி்க்கை 2200 ஐக் கடந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் கூறுகிறது.

குறிப்பாக, தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டில் மாத்திரம் முஸ்லிம் மாணவர்கள் 90,000 பேர், தங்களது கல்வி உதவித் தொகைகளை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக, எந்த ஒரு வங்கியும் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் துவக்க மறுத்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வங்கிகளில் முஸ்லிம்கள் வைத்திருந்த கணக்குகளும் கணிசமாகக் குறைந்துவிட்டதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, முஸ்லிம்கள் வைத்திருந்த வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை, அஸ்ஸாம் மாநிலத்தில் 47 சதம் குறைந்திருக்கிறது. அந்த மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டும் 32 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் 46 சதமும், கேரளத்தில் சுமார் 7 சதமும், மேற்கு வங்கத்தில் 17 சதமும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பகுதிகளை, சிவப்பு மண்டலங்கள் அல்லது வங்கிக்கணக்குத் துவக்குவது அல்லது கடன் வழங்குவதில் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய பகுதிகளாக வங்கிகள் தரம்பிரித்திருப்பதாக ஆணையம் கூறுகிறது.

குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகள், சமூக விரோதிகள் அதிகமாக நடமாடுவதால், கடன்களை வசூலிப்பதில் ஏற்படும் சவால்கள், வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகிய காரணங்களுக்காக வங்கிகள் அத்தகைய சிவப்பு மண்டலங்களை உருவாக்கியிருப்பதாக, வங்கிகளின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது தெரியவந்திருப்பதாக சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பிகார், ஆந்திரம், கர்நாடகம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் ஆணையங்களுக்கு மட்டும் முஸ்லிம் மக்களிடமிருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தெரிவித்துள்ளது.
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.