அல்லாஹ்வின் மகத்தான அற்புதம் ஒன்று ஜூலை நான்கு அன்று நிகழ்திருக்கிறது ‎என்று சொல்வது மிகையானதல்ல! மாநாட்டில் கலந்துக்கொண்ட லட்சோப லட்சம் ‎மக்களும் இதை உணர்திருப்பார்கள்.‎ ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுவதை போல நாம் ‎வாழும் இந்த சமுதாய மக்களுக்கு அல்லாஹ் காட்டித்தந்த ஒரு அற்புதம், ‎தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!!‎

மாநாடு என்றால், அதில் நிகழ்த்தப்படும் உரைகளின் முக்கியத்துவம் கருதி மக்கள் ‎குழுமுவார்கள், தலை சிறந்த பேச்சாளர்கள் பேசினால் அதை கேட்க மக்கள் அணி ‎திரள்வார்கள், அறிவுக்கு தீனி போடும் வகையில் இம்மையிலும் மறுமையிலும் ‎நன்மையை ஈட்டித்தரும் வகையில் மார்க்கம் சார்ந்த பயான்கள் இடம் பெற்றால் ‎அதில் முஸ்லிம்கள் அணியணியாக குழுமுவது வழக்கமாக பார்க்கும் ஒன்று.‎

ஆனால், ஜூலை நான்கு, சென்னையை ஸ்தம்பிக்க வைத்த இந்த மாபெரும் மக்கள் ‎வெள்ளம் குழுமியதன் நோக்கம் தான் என்ன? தஞ்சையில் இரண்டு வருடத்திற்கு ‎முன்பு நடந்ததை போல் தவ்ஹீத் மாநாடு என்றா? பல மார்க்க பயான்கள் ‎நிகழ்த்தப்படும் என்றா? குர்ஆன் வகுப்புக்கள் நிகழ்த்தப்படும் என்றா? இல்லை!!‎

எந்த தனிநபருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படாமல், எந்த மார்க்க ‎சொர்ப்போழிவுகளும் இல்லாமல், இட ஓதிக்கீட்டுக்கான கோஷம் விளித்து பின் ‎கலைந்து செல்ல வேண்டும என்ற ஒற்றை குறிக்கோளுடனே தவ்ஹீத் ஜமாஅத் ‎மக்களை அழைத்தது..‎

தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும் சாரை சாரையாக மக்கள் அணிதிரண்டதை ‎பார்த்த போது எனது கண்கள் கலங்கின. தவ்ஹீத் ஜமாத்தின் மீது மக்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கையும் அன்பையும் ‎தவிர வேறு எதையும் அங்கு என்னால் காண முடியவில்லை.‎

கர்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள், நடந்து செல்லவே ‎சிரமப்படக்கூடிய வயதானோர் என்று அந்த திடலை நிரப்பியவர்களை பார்க்கும் ‎போது, "தவ்ஹீத் ஜமாஅத் கூப்பிடுகிறதா?, நாங்கள் வருவோம்! எப்பாடு பட்டாவது ‎வருவோம்!! , என்ற மனக்கண்ணோட்டம் தான் அவர்களிடம் வெளிப்பட்டது.‎

‎5 கிலோமீட்டராக முதலில் அறிவிக்கப்பட்ட பேரணி, பின்பு மக்களின் சிரமத்தை ‎குறைப்பதற்காக ஒரூ கிலோமீட்டராக குறைக்கப்பட்டது. சென்னை தலைமை ‎செயலகத்திலிருந்து துவங்கிய பேரணி, தீவுத்திடலை சென்றடைவதுக்குள் காவல் ‎துறையினரும் தவ்ஹீத் ஜமாஅத் பிரதிநிதிகளும் திக்கு முக்காடி போய் ‎விட்டார்கள்.‎

கூட்டத்தினிடையே நுழைந்து கொண்டு மக்களை ஒழுங்குப்படுத்தும் வேலையை ‎செய்துக்கொண்டிருந்தார் பிஜே! மிகப்பெரிய அறிஞர், தலைவர் என்ற பகட்டு ‎சிறிதும் இல்லாமல், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் நிலையிலும் இத்தனை ‎வெளிப்படையாக அவர் இயங்கிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது அவர் மீது நாம் ‎கொண்ட அன்பும் மரியாதையும் இன்னும் அதிகமாகிறது.‎

பேரணி முடிவுற்றது தீவுதிடலின் வாயிலில். லட்சோப லட்சம் மக்களை ‎எதிர்ப்பார்த்து ஏற்பாடு செய்யப்பட மாநாடு என்ற வகையில் ஜமாத்தார்கள், ‎அவர்களது சக்திக்குட்பட்டு அனைத்து வசதிகளையும் மிகச்சிறப்பாக செய்து ‎வைத்திருந்தார்கள். களைப்புற்று வருபவர்களுக்கு மோர்ப்பந்தல்கள், குடிநீர் ‎பாக்கட்கள், மேடையை காண இயலாதவர்களுக்காக ஆங்காங்கே LED ஸ்க்ரீன்கள், ‎உணவு ஸ்டால்கள், மருத்துவ முகாம்கள், அவசர ஆம்புலன்ஸ் வசதிகள், ‎மொபையில் கழிப்பிடங்கள், தீவு திடலையும் கடந்து சென்னை அண்ணா ‎சாலையில் நின்று கொண்டிருப்பவர்களுக்காக மைக் செட்கள், ராட்சச கேமராக்கள், ‎மின்னொளிகள் (floodlights) என தீவுத்திடலில் அமைக்கப்பட்ட ஏற்பாடுகள் மலைக்க ‎வைத்தன.‎

ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் மூன்று மூன்று நிமிடங்கள் பேசிய பிறகு ‎சிறப்புரையாக பிஜே ஒன்றரை மனி நேரம் பேசினார்.‎ அவ்வப்போது மழை தூறல் இருந்த போதிலும், அனைவரது துஆவின் காரணமாக ‎பலத்த மழையை அல்லாஹ் அன்றிரவு இறக்கவில்லை. ‎

இறுதியாக உரையாற்றிய ஹாரூன் MP அவர்கள், "லட்சோபலட்சம் மக்கள் குழுமிய ‎இந்த மாநாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உங்கள் கோரிக்கையை நிச்சயம் ‎பிரதமரிடமும் சோனியாவிடமும் எடுத்து சொல்வதாக வாக்களித்தார். ‎

மாநாட்டின் உரைகளுக்கு நடுவே, காணாமல் போனவர்களை பற்றிய அறிவிப்பு ‎அதிகமாக இருந்தது, கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தினால் ஏற்பட்ட ஒன்று ‎என்பதை புரிய முடிந்தது.‎

குடும்பத்துடன் பயணப்பட்டது சிரமமாக எனக்கு தோன்றினாலும் , ‎அங்கு நான் கண்ட காட்சிகளை பார்த்த பிறகு அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு, எனது ‎கஷ்டங்களெல்லாம் எதுவும் இல்லை என்றானது. குழந்தைகளை தூக்கி சுமந்து ‎வந்த தாய்மார்கள், கட்டுக் கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி, பிள்ளைகளை ‎தொலைத்து விட்டு தவித்துக்கொண்டிருந்தவர்கள், ஒரு சிறு வண்டியில், 30, 40 ‎பேராக திக்கு முக்காடிய பயணங்கள், இயற்க்கை தேவைக்காக அவர்கள் அடைந்த ‎சிரமங்கள் அனைத்துமே கண்களில் நீரை வர செய்பவை!‎

இட ஒதிக்கீட்டை குறித்து இத்தனை விழிப்புணர்வா? தமிழக மக்களிடையே ‎ஏற்பட்ட இந்த புரட்சி, அதிசயிக்க வைக்கிறது!‎ வேறு வேறு இயக்கங்கள் அழைத்த போது திரளாத இந்த மக்கள், தவ்ஹீத் ஜமாஅத் ‎அழைத்தவுடன் திரண்டு வருகிறார்கள் என்றால், இதில் சிந்திக்க பல விஷயங்கள் ‎உள்ளன!‎

தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கையில் கருத்து வேறுபாடு கொண்ட பலர் வந்தார்களே, ‎இவர்கள் அனைவரும் பிற இயக்கங்கள் அழைத்தால் செல்லக்கூடியவர்களா? ‎நிச்சயம் இல்லை! கொள்கையில் முரண்பாடு இருந்தாலும், இவர்கள் ‎நம்பிக்கைக்குரியவர்கள், உள தூய்மையுடன் எதையும் போராடுவார்கள் என்று ‎அனைத்து மக்கள் மனதிலும் ஆணித்தரமாக இடம் பிடித்திருக்கிறது தவ்ஹீத் ‎ஜமாஅத்!‎

இந்த கோரிக்கைக்காக எந்த துரும்பையும் எடுத்துப்போடாத இன்ன பிற ‎ஜமாத்தார்கள், தவ்ஹீத் ஜமாத்தின் இந்த மாநாட்டை விமர்சிக்க மட்டும் தயக்கம் ‎காட்டவே இல்லை.‎ வீடு வீடாக சென்று மக்களை மூளை சலவை செய்தது ஒரு கூட்டம் என்றால், இட ‎ஒதிக்கீடு கேட்பதே ஹராம் என்று மற்றொரு பக்கம். இவர்கள் சுயநலனுக்காக தான் ‎மாநாடு நடத்துகிறார்கள் என்ற விமர்சனம் ஒரு பக்கம் என்றால், பிற இயக்க ‎தலைவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு பக்கம் என இந்த ‎மாநாட்டின் வெற்றியை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி ‎கொண்ட பெட்டையர்கள் எடுத்துக்கொண்ட முஸ்தீப்கள் அனைத்தையும் ‎அல்லாஹ் தூள் தூளாக்கி விட்டான்.‎

வசை பாடி திரிந்த கூட்டம் வாய் மூடி மௌனிகளாக ஆகி விட்ட நிலையில் ‎எடுத்துக்கொண்ட குறிக்கோளில் வீறு நடை போட்டு செல்கிறது தமிழ் நாடு ‎தவ்ஹீத் ஜமாஅத் !!!‎

மாநாடு நடைபெற்ற மறுநாளே, பிரதமரிடமிருந்து அழைப்பு வருகிறதென்றால், ‎தவ்ஹீத் ஜமாத்தின் மக்கள் சக்தி, ஆட்சியாளர்களை எந்த அளவிற்கு ‎அசைத்திருக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.‎

நாளைய நமது சந்ததிகள் தலை நிமிர்ந்து வாழ வழி ஏற்படுத்தி தந்த இந்த ‎ஜமாத்திற்க்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நாம் நன்றி கடன்பட்டிருக்கிறோம். ‎எடுத்துக்கொண்ட செயல்களில் இதே போல், அல்லது இதை விட சிறப்பாக நாம் ‎செயலாற்றிடவும், ஏகத்துவம், நமது நாட்டில் தழைத்தோங்கவும், நமது அனைத்து ‎உரிமைகளும் வென்றெடுக்கப்பட்டு நமது சமுதாயம் தலை நிமிரவும் நாம் இரு ‎கரம் கூப்பி அந்த ஏகனிடம் பிரார்த்திப்போம். மத்தியில் விரைவில் இட ஒதிக்கீடு ‎கிடைத்திடவும் நாம் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.‎

அன்புடன், நாஷித் அஹமத்
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.