யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (1901), முஸ்­லிம் (1393)

பிறையை கண்களால் பார்த்துதான் ரமலானை ஆரம்பிக்க வேண்டும்

'அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 1909

''பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி 1906

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)

ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 1899

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் சங்கிரியால் விலங்கிடப்படுகின்றனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி) நூல் : முஸ்­லிம் (1957)

''ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர­லி) நூல்: புகாரீ (1782) முஸ்­லிம் (2408)

இறைத்தூதரின் எச்சரிக்கை

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி, ''ஆமீன், ஆமீன், ஆமீன்'' என்று கூறினார்கள். அப்போது, ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரில் ஏறும் போது, ஆமீன், ஆமீன், ஆமீன் என்று கூறினீர்களே!'' என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, ''எவர் ரமலான் மாதத்தை அடைந்து அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் நரகம் புகுவாரோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்'' என்று கூறி, ''ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ''எவருக்குப் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல் இறந்து நரகம் செல்வாரோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்'' என்று கூறி, ''ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள். நான் ஆமீன் என்றேன். ''எவரிடம் உங்களைப் பற்றி கூறப்பட்டு, உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்'' என்று கூறி, ''ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள். நான் ஆமீன் என்றேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூற்கள் : இப்னு ஹிப்பான், மவாரிதுல்லம்ஆன், முஸ்னத் அபீயஃலா, முஸ்னத் பஸ்ஸார், தப்ரானீ கபீர்

இந்த ஹதீஸ் தரும் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு நம்மை நாமே இந்த ரமளான் மாதத்தில் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் அல்லாஹ்வின் சாபத்தை எதிர் கொள்ள வேண்டும்.

நோன்பு கட்டாயக் கடமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி 8

நோன்பின் சிறப்புகள்

யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (1901), முஸ்­லிம் (1393)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நோன்பு எனக்கு உரியது. அதற்கு நானே கூ­ கொடுப்பேன்'' என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களி­ருந்து காக்கும்) கேடயமாகும். எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம் கூச்ச­ட்டு சச்சரவு செய்ய வேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீதாணையாக! நோன்பாளியின் வாயி­ருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 1904

''ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுாறு மடங்கு வரை கூ­லி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூ­ வழங்குவேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ர­லி) நுால்: முஸ்­லிம் (2119)

''சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் (ர­லி) நூல்: புகாரீ (1896), முஸ்­லிம் (2121)

''நோன்பு நரகத்தி­ருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துôரியை விடச் சிறந்ததாகும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­)லி நுால்: புகாரீ (1894)

''நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நுால்: புகாரீ (1904)

ஒருவர் ஐந்து நேரத் தொழுகைகள், ஒரு ஜும்ஆவி­ருந்து மறு ஜும்ஆ (தொழுது), ஒரு ரமளானி­ருந்து மறு ரமளான் (வரை நோன்பு நோற்று), பெரும் பாவங்களை விட்டும் விலகியிருந்தார் எனில் அவற்றுக்கிடையில் ஏற்பட்ட பாவங்களுக்கு அவை பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: முஸ்­லிம் 344

நோன்பின் நோக்கம்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது (அல் குர்ஆன் 2:183)

நிய்யத்

எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: புகாரீ)

நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல் தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை.

நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி ஃபர்ழி ரமளான ஹாதிஸிஸ்ஸனதி ­ல்லாஹித் தஆலா என்று வாயால் சொல்­ வைக்கப்படும் இந்த நிய்யத் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது கிடையாது . எனவே இது போன்ற வாசகங்களைக் கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். அதே சமயம் சுப்ஹ் நேரத்திற்கு முன்பே நோன்பு நோற்பதாகத் நம் மனதில் தீர்மானிப்பது அவசியம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பாகவே நோன்பு நோற்க வேண்டும் என்று தீரமானிக்க வில்லை அவருக்கு நோன்பு கிடையாது . அறிவிப்பவர் : ஹப்ஸா (ர­லி) நூல் : நஸாயீ

ஸஹர் பாங்கு

பிலால் (ர­லி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''இப்னு உம்மி மக்தூம் (ர­லி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்'' என்று கூறினார்கள். அறிவிப்போர்: ஆயிஷா (ர­லி) இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி 1918, 1919

இந்த ஹதீஸி­ருந்து ஸஹரின் கடைசிப் பகுதியில் ஸஹர் பாங்கும், ஸஹர் முடிவை அறிவிப்பதற்கு சுப்ஹ் பாங்கும் சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.

இன்று ஜும்ஆவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வகையில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் ரமளான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் சொல்லப்பட்ட இரண்டு பாங்குகளை இன்று நம்மில் யாரும் நடைமுறைப் படுத்துவதில்லை. இந்த நபிவழியை நமது ஜமாஅத்தினர் அனைவரும் நடைமுறைப் படுத்த முன்வர வேண்டும்.

ஸஹர் உணவைச் சாப்பிடுதல்

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறி­ருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! (அல்குர்ஆன்2:187)

சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வ­யுறுத்துகின்றன.

பிலால் (ர­லி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''இப்னு உம்மி மக்தூம் (ர­லி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்'' என்று கூறினார்கள். அறிவிப்போர்: ஆயிஷா (ர­லி) இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி 1918, 1919

ஸுப்ஹ் தொழுகைக்கு பாங்கும் சொல்லும் வரை நாம் உண்ணலாம் பருகலாம். நோன்பு கால அட்டவணை என்று அச்சிட்டு வெளியிடக் கூடியவர்கள் ஸுப்ஹ் பாங்கிற்கு 10 நிமிடம் முன்பாகவே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாகப் போட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க நபிவழிக்கு மாற்றமானதாகும். எனவே சகோதரர்கள் இந்த நோன்பு கால அட்டவணைகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்.

ஸஹர் உணவைத் தாமதப்படுத்துதல்

சிலர் இரவு இரண்டு மணிக்கே எழுந்து ஸஹர் உணவை முடித்து விட்டு உறங்கி விடுகின்றனர். இதுவும் நபிவழிக்கு மாற்றமான செயலாகும்.

ஸஹர் நேரத்தைத் தாமதப்படுத்தி, நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ர­லி) நூல்: அஹ்மத்

மேற்கண்ட ஹதீஸ் ஸஹரைத் தாமதப்படுத்த வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் மூன்று மணிக்குள்ளாக ஸஹரை முடித்து விடும் வழக்கம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இது நபிவழிக்கு மாற்றமான செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

விடி ஸஹர்

தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது. உறக்கம் மே­ட்டதால் சில நேரங்களில் ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழிப்பார்கள். ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பது நன்றாக தெரிந்திருந்தும் அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதற்காக நிய்யத் செய்து கொள்கின்றனர்.

சுபுஹ் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணவோ பருகவோ கூடாது என்று கட்டளை உள்ளது. எந்த நேரத்தில் சாப்பிடவோ பருகவோ கூடாதோ அந்த நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் ஒரு நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ

நோன்பு துறக்கும் போது, அல்லாஹும்ம லக்க ஸம்து... என்ற துஆவை பரவலாக ஓதி வருகின்றார்கள். இது ஆதாரப்பூர்வமானது அல்ல. மேலும் இந்த துஆவைச் சொல்­ விட்டால் நோன்பு முறிந்து விடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதற்கெல்லாம் நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. அது போல் தஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷாஅல்லாஹ் என்று வரக்கூடிய துஆவும் ஆதாரப்பூர்வமானதல்ல. எனவே நோன்பு திறக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று கூறியே நோன்பு திறக்க வேண்டும்.

உணவு சாப்பிட்டு முடித்ததும் ஓதும் துஆ

பொதுவாக உணவருந்திய பின் ஓதும் துஆவை நபியவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அதனை நோன்பு திறந்த பிறகும் ஓதிக் கொள்ளலாம்.

الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا

''அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா''

பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும் (புகாரி : 5458)

நோன்பு திறப்பதை விரைவுபடுத்துதல்

சூரியன் மறைந்து இந்தத் திசையி­ருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையி­ருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ர­லி) நூல்: புகாரி 1954

நோன்பு திறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ர­லி) நூல்: புகாரி 1957

சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்தி­ருந்து 5 அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர். தற்போது வெளியிடப்படும் ஆயிரக்கணக்கான நோன்பு அட்டைகள், பள்ளிவாசல்களில் குறிக்கப்படும் நோன்பு துறக்கும் நேரம் அனைத்தும் நபிவழிக்கு மாற்றமானவையே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நோன்பு துறக்க ஏற்ற உணவு

யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும். ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மா­க்(ர­லி) நூல்: திர்மிதீ (631), அபூதாவூத் (2008)

இவை இல்லாவிட்டால் நம்மிடம் எந்த உணவு உள்ளதோ அதன் மூலம் நோன்பு துறக்கலாம் சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறக்கின்றனர். இது நபியவர்கள் காட்டித் தராத மூடநம்பிக்கையாகும்.

நோன்பு திறப்பதற்கு உணவளித்தல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு நோன்பாளியை (உணவளித்து) நோன்பு திறக்கச் செய்கிறாரோ அவருக்கு நோன்பாளியின் நன்மையைப் போன்று கிடைக்கிறது. ஆனாலும் நோன்பாளியின் நன்மையில் எதுவும் குறைந்து விடாது. அறிவிப்பவர் : ஸைத் பின் ஹா­த் (ர­லி) நூல் : திர்மிதி (735)

உணவளித்தவருக்காக ஓதும் துஆ

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஸக்தஹும் வஃபிர்லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா நீ இவர்களுக்கு ரிஸ்க்காஹ வழங்கியவற்றில் அவர்களுக்கு பரக்கத் செய்வாயாக. அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குவாயாக. அவர்களுக்கு அருள்புரிவாயாக. (திர்மிதி 3500)

اللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِي وَأَسْقِ مَنْ أَسْقَانِي

அல்லாஹும்ம அத்இம் மன் அத்அமனீ வஅஸ்கி மன் அஸ்கானீ

''இறைவா! எனக்கு உண்ண உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்குப் பருகப் பானம் புகட்டியவருக்கு நீ புகட்டுவாயாக!'' (முஸ்­லிம் 4177)

நோன்பை முறிக்கும் செயல்கள்

சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பது, பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடுதான் நோன்பு எனப்படுகிறது.

நோன்பாளிக்கு இந்த மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்துவிடும். அது போன்று புகை பிடித்தல் மார்க்கத்தின் அடிப்படையில் அறவே ஹராமானதாகும். எனவே நோன்பு வைத்துக் கொண்டு புகைபிடித்தால் நோன்பு முறியுமா? என்ற கேள்வியும் தவறானதாகும். பின்வரும் ஹதீஸி­ருந்து இதனை விளங்கிக் கொள்ளலாம்.

பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும் தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (1903)

நோன்பு நோற்றுக் கொண்டு சினிமாக் கொட்டகைகளில் தவம் கிடப்பது, நோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம், மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவது, பொய், புறம் பேசுவது ஆகியவற்றில் சர்வ சாதாரணமாக முஸ்­ம்கள் ஈடுபடுகின்றனர். பசியோடு இருப்பது மட்டும் தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் லி அறியாமையாக நடந்து கொண்டால், ஏசினால், நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரீ (1894)

பொதுவாக நம்முடன் சண்டையிடுபவரோடு சண்டையிட அனுமதியிருந்தும் அதைக்கூட தவிர்த்து விட வேண்டும் என்றால் நோன்பில் எவ்வளவு பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். சாதாரண நாட்களில் தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் கிடந்து ஹராமான காட்சிகளைப் பார்ப்பவர்கள் நோன்பு நோற்ற நிலையிலாவது அதி­ருந்து விடுபட வேண்டும். நமது நோன்பைப் பாழாக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நோன்பை முறித்ததற்குரிய பரிகாரம்

நோன்பு நோற்றவர் நோன்பு வைத்திருந்த நினைவு இருக்கும் போது நோன்பை விடுவதற்குரிய காரணங்கள் ஏதுமின்றி நோன்பை முறித்தால் அது பெருங்குற்றமாகும். நோன்பு நோற்காதவர்களை விட நோன்பை வேண்டுமென்று முறிப்பவர்கள் கடும் குற்றவாளிகளாவர்.

இவ்வாறு நோன்பை முறித்தவர் ஒரு நோன்பை முறித்ததற்காக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அதற்குரிய வசதியைப் பெறாதவர்கள் ஒரு நோன்பை முறித்ததற்காக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதையும் விடாமல் தொடராக நோற்க வேண்டும். அந்த அளவுக்கு உட­ல் வலு இல்லாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

இம்மூன்று பரிகாரங்களில் எதையுமே செய்ய இயலாதவர்கள் எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்றாலும் செய்த குற்றத்திற்காக அழுது மன்னிப்புக் கேட்க வேண்டும். இதனை புகாரி 1936 ஹதீஸி­ருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்

''ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் அளித்துள்ளான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூற்கள்: புகாரீ (1933)

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது

ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில் ) நோன்பும் நோற்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி) உம்மு ஸலமா (ர­லி) நூற்கள்: புகாரீ (1926)

தொழுகையை நிறைவேற்றத் தான் குளிப்பது அவசியமே தவிர நோன்புக்காக குளிக்க வேண்டியதில்லை. குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்று விட்டு சுப்ஹு தொழுகைக்காக குளிக்கலாம்.

நோன்பை முறிக்காத நடைமுறைக் காரியங்கள்

நோன்பு நோற்றவர் குளிப்பது, குழந்தைகளை முத்தமிடுதல், இரத்தக் காயங்கள் ஏற்படுதல், எச்சிலை (சளியை) விழுங்குதல், முடி வெட்டுதல், வாசனை சோப்பு போடுதல், நறுமணம் பூசுதல், வாந்தி எடுத்தல், நோன்பு நேரத்தில் தானாக தூக்கத்தில் ஸ்க­தம் ஏற்படுதல், உணவை நாவால் ருசி பார்த்து உமிழ்தல், பற்பசை அல்லது பல்பொடியைக் கொண்டு பல் துலக்குதல், மருத்துவத்திற்காக ரத்தம் வழங்குதல், ஆற்றில் முங்கிக் குளித்தல், காது, மூக்கு வழியாக தண்ணீர் உள்ளே செல்லுதல், நோய் நிவாரணத்திற்காக ஊசி போட்டுக் கொள்ளுதல், . கண், காது போன்றவற்றுக்கு மருந்து போடுதல், தலைவ­ தைலம் பஸ்ன்படுத்துதல், குழந்தைக்கு பாலூட்டுதல் போன்ற செயல்களால் நோன்பு முறியாது.

உட­ற்கு தெம்பைத் தரக்கூடிய சத்து ஊசிகள், குளுக்கோஸ் போன்றவை ஏற்றினால் நோன்பு முறிந்து விடும்.

பயணத்தில் நோன்பு

ஹம்ஸா பின் அம்ரு (ர­லி) நபி (ஸல்) அவர்களிடம், ''பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?'' என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், ''நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள். நீ விரும்பினால் விட்டு விடு'' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி) நூல்: புகாரி 1943

நோன்பு நோற்பதி­ருந்து சலுகை பெற்றவர்கள்

தள்ளாத வயதினர், நோயாளிகள், பயணிகள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், போன்றவர்களுக்கு நோன்பு நோற்பதி­ருந்து சலுகை வழங்கப்பட்டுள்ளது.

நோயாளிகளில் இரண்டு வகையினர் உள்ளனர். கேன்சர், அல்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.

தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டு, நோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.

இது போன்று பயணிகள், மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், போன்றவர்களும் நோன்பை வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாம். விடுபட்ட நோன்புகளை அடுத்த வருட இரமலானிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று எல்லை எதையும் நபியவர்கள் வரையறுக்கவில்லை. எனவே அடுத்தடுத்த வருடங்களிலும் நோற்றுக் கொள்ளலாம்.

ஆனால் எப்போதும் அறவே நோன்பு நோற்க முடியாதவர்களான தள்ளாத வயதினர், நிரந்தர நோயாளிகள் போன்றவர்கள் ஒரு நோன்பிற்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள், மற்றும் கிழவிகள் ஒரு நாள் நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்'' (புகாரி 4505)

நமது நாட்டைப் பொறுத்த வரை ஒரு நாள் உணவு என்பது மூன்று வேளையாகும். எனவே ஒரு நோன்பை விட்டதற்காக மூன்று வேளையும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இதுவே பேணுதலான வழிமுறையாகும்.
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.