
பிரபல தமிழக ஹிந்து சாமியார் நித்தியானந்தர் , ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோவை பிரபல தமிழ்த் தொலைக்காட்சி நேற்று (மார்ச்.2) ஒளிபரப்பியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பக்தர்களும், இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புனிதமான காவி உடை தரித்து நாட்டு மக்களுக்கு அருளாசி வழங்கியும் பத்திரிகைகளில் தொடர் எழுதியும் நல்வழி போதிக்கும் சாமியாரின் சல்லாப லீலைகள், இத்தனை காலமாக அவரை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திற்கு விரைந்து வந்த இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி ஆசிரமத்தைத் தாக்கினர். அங்கிருந்து நித்தியானந்தாவின் படங்களை கிழித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சிவபாபு தலைமையில் அக்கட்சியினர் திடீரென ஆசிரமம் முன் வந்து நித்யானந்தருக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் சிவபாபு உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். ஆசிரமத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சித்தூர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தை பொதுமக்கள் தாக்கி சூறையாடி தீவைத்தனர். 2 பஸ்களுக்கும் தீவைக்கப்பட்டது. சித்தூர் மாவட்டம் வரதையாபாலம் என்ற இடத்தில் இந்தஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தின் தகவல் அலுவலகமும் தாக்கி சூறையாடப்பட்டு விட்டது.
ஆசிரமத்தில் பெண்களுக்கு லேகியத்தில் போதை மருந்தை கலந்து தருவதாகவும், பண மோசடி நடப்பதாகவும் கூறி பொதுமக்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர்.
தாக்குதலில் ஆசிரமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. 2 பஸ்களுக்குத் தீவைக்கப்பட்டது. மேலும் ஆசிரமத்திற்குள் இருப்போரையும் பொதுமக்களே மீட்டு வந்தனர்.
ஆசிரமம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் பெருமளவில் விரைந்து வந்தனர். போராட்டக்காரர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தினர். ஆசிரமத்தைக் காக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
புதுச்சேரி அருகே உள்ள ஏம்பலம் கிராமத்தில் உள்ள நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் சூறையாடப்பட்டது. ஆசிரமத்துக்குள் இருந்த பொருட்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது. மேலும் ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த சாமியாரின் படங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதேபோல் அம்பலத்தார் மடத்து வீதியில் உள்ள சாமியாரின் யோகா மையத்திலும் சாமியாரின் படங்களுக்கு தீ வைக்கப்பட்டது. யோகா மையம் சூறையாடப்பட்டது.
கதவைத் திற காற்று வரும் என்ற தலைப்பில் நித்தியானந்தா சுவாமிகளின் போதனைகள் குறுகிய காலத்தில் பிரபலமானவை.
இவரது ஆசிரமக் கிளைகள் இந்தியாவின் அனைத்து பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. 33 நாடுகளில் 1200 மையங்களுடன் இயங்கும் அவரது தியானபீடங்களில் ஏராளமானவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். கல்லூரிகளில் பல பாடத் திட்டங்கள் இருப்பது போல நித்யானந்தா தியான பீடங்களிலும் பல தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது.
Posted by
Unknown
Labels:
நித்யானந்தா
0 comments:
Post a Comment