டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி, கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் மனைவி ஆகியோரிடம் விரைவில் சிபிஐ விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

அநேகமாக வரும் மார்ச் 15ம் தேதி இந்த விசாரணை நடக்கும் என்று சிபிஐ தரப்பில்
உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள பல்வாவின் டிபி ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கடனாக ரூ.214 கோடி கொடுத்தது. இது தொடர்பாக கனிமொழியிடம் சிபிஐ விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

இந்தப் பணத்தை கலைஞர் தொலைக்காட்சி ரூ. 31 கோடி வட்டியோடு திரும்பத் தந்துவிட்டது. ஆனால், எதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் பல்வாவின் நிறுவனம் ரூ. 214 கோடி தந்தது என்பது சிபிஐ எழுப்பும் கேள்வியாகும்.

அதே போல பல்வேறு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிக் தந்ததற்காக ராசாவுக்குக் பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சமாகக் கிடைத்ததாகவும், அதை மொரீஷியர், சிங்கப்பூர் உள்பட 10 நாடுகளில் தனது மனைவி பரமேஸ்வரியி்ன் பெயரிலான கணக்குகளில் முடக்கியுள்ளதாகவும் சிபிஐ கருதுகிறது. இது குறித்து அவரிடமும் விசாரணை நடக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் ரியல் எஸ்டேட் நிறுவனமான யூனிடெக் நிறுவனம் 2007ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற விண்ணப்பித்தபோது, அந்த நிறுவனத்துக்கு டாடா குழுமத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனமான டாடா ரியாலிடி அண்ட் இன்பிராஸ்டிரக்சர் ரூ.1600 கோடி கடன் கொடுத்து உதவியது. எதற்காக போட்டி தொலைபேசி சேவை நிறுவனத்துக்கு டாடா நிறுவனம் கடனுதவி தந்தது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் ஸ்வான் டெலிகாம் மூலமாக டாடா நிறுவனம் தனக்கு கூடுதலான ஸ்பெக்ட்ரத்தை வளைத்துப் போட்டதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த விஷயத்தில் பேரம் நடத்தியவர் நீரா ராடியா என்பதால் அவரிடம் சிபிஐ மீண்டும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

மேலும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அன்னிய செலாவணி சட்டத்தை மீறியுள்ளனவா என்பதை அறிய அமலாக்கப் பிரிவு (Enforcement directorate) இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிதி ஆதாரம் குறித்து விவரம் கேட்டு சைப்ரஸ், நார்வே உள்ளிட்ட 8 நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற தகுதியற்ற நிறுவனங்களின் பட்டியலையும் சிபிஐ தயாரித்து வருகிறது. அந்த நிறுவனங்கள் திட்டமிட்டு மோசடி செயலில் ஈடுபட்டனவா என்பது குறித்த ஆய்வும் நடக்கிறது.

இந்த விவகாரத்தில் மார்ச் 31ம் தேதிக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தயாளு அம்மாளிடமும் விசாரணை?:

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கலைஞர் டிவியின் அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கும் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளிடமும் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் என தகவல்கள் பரவியுள்ளன.
கலைஞர் தொலைக்காட்சியில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன.

பிரச்சனைக்கு தொகுதிகள் காரணமல்ல..காங்கிரஸ்:

இந் நிலையில் திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதற்கு தொகுதிகள் ஒதுக்கீடுப் பிரச்சனை காரணமல்ல என்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் 63 இடங்களைக் கேட்பதாகவும், கேட்கும் தொகுதிகள் தரப்பட வேண்டும் என்றும் கோருவதாகவும் திமுக குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், பிரச்சனை அதுவல்ல என்று டெல்லி பத்திரிக்கையாளர்களிடம் காங்கிரஸ் தரப்பு மறுத்து வருகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனது குடும்பத்தினரை சிபிஐ விசாரிக்கக் கூடாது என்ற திமுக தலைமையின் கோரிக்கையைப் பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டதும், இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேச முடியாத வகையில், ராகுல் காந்தி தரப்பு முட்டுக் கட்டை போட்டதும் தான் திமுகவின் கோபத்துக்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

நீதிமன்ற நெருக்கடியால் அடுத்த சில நாட்களில் கனிமொழி மட்டுமன்றி கலைஞர் தொலைக்காட்சியின் முதலீட்டாளர் என்ற வகையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும் சிபிஐ கேள்வி கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதால் தான் திமுக இந்த முடிவுக்கு வந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனையை உருவாக்கி அதை ஒரு காரணத்தை வைத்து கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டால், பின்னர் தங்களை சிபிஐ விசாரணை செய்தால், கூட்டணியிலிருந்து விலகியதால் காங்கிரஸ் தங்களை பழி வாங்குவதாகக் கூறிக் கொண்டு அனுதாபம் தேடிக் கொள்ளலாம் என திமுக நினைக்கிறது என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில்.

இதனால் தான் திமுகவுடன் காங்கிரஸ் தரப்பு பேச்சு நடத்தாமல் உள்ளது. வெறும் தொகுதிப் பங்கீடு பிரச்சனை என்றால் உடனே பேசித் தீர்வு கண்டிருக்க முடியும். இங்கு பிரச்சனை தொகுதிகள் அல்ல.. ஸ்பெக்ட்ரம் விசாரணை தான் என்கிறார்கள்.

Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.